ஒட்டக்கூத்தர் ஒட்டக்கூத்தர் என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரம சோழன் (ஆட்சி 1120-1136), இரண்டாம் குலோத்துங்கன் (ஆட்சி 1136-1150), இரண்டாம் இராசராசன் (ஆட்சி 1150-1163) ஆகிய மூன்று சோழர்கள் காலத்திலேயும் வாழ்ந்தவர். இவர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் (இன்றைய திருவரம்பூரில்) பிறந்தார். திருநாவுக்கரசர் பாடிய திருவெறும்பியூர் என்பதுவும் இவ்வூரே. இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன. “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் ” என்பது வாய்மொழி வழக்கு.
நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர் என்றும், சில நூற்றாண்டுகள் பின் வாழ்ந்தவர் என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. இதே போல கம்பரும் ஒட்டக்கூத்தருக்குப் பின் வாழ்ந்தவர் என்னும் கருத்து உள்ளது.