ஒரு இனத்தின் தொன்மை யையும், பெருமையையும், அவ்வினத்தின் வரலாற்றுச் சிறப்பினையும் அறிந்துகொள்ள வேண்டுமானால், அம்மக்கள் வாழ்ந்த இடம், பயன்படுத்திய மொழி, அவர்களின் கலை மற்றும் கலாசார பண்பாட்டுக் கூறுகள் போன்றவை வழியாகவே அறிந்துகொள்ள முடியும்.
இவ் வகையில் பார்த்தால், ஏழத்தாழ மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே சிறந்த நாகரிக வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள் என்பது புலனாகும். கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தமிழில் இலக்கியங்கள் வெளிவந்துள்ளன.
தமிழில் சிறந்த இலக்கியங்கள் தோன்றி வெளிவந்து, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பே மற்ற தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் இலக்கியங்கள் பிறந்தன. உலகின் தொன்மையான மொழிகளில் கிரேக்கம், சீனம், தமிழ் ஆகிய மூன்று மொழிகள்தான் இன்றளவும் பேச்சு வழக்கில் உள்ளன.
இவற்றுள் காலத்திற் கேற்ற மாற்றங்களைத் தழுவிக் கொண்டு பேச்சு, எழுத்து என்னும் இரு வழக்கிலும் இன்று மிகச் சிறந்து விளங்கும் ஒரு மொழியாகத் தமிழ்மொழி விளங்கி வருகின்றது.