செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பாலூரிலே, வேளாளர் குலத்திலே, 1908ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 14ம் தேதி பிறந்தவர். பெற்றோர்கள் துரைசாமி முதலியார், மாணிக்கம்மாள். துரைசாமி முதலியார் செந்தமிழ்ப் பற்றும், சிவபிரானிடத்திலே பேரன்புமுடையவர். தம்முடைய புதல்வருக்கும் இவை இனிதமைய வேண்டுமென்று பெரிதும் முயன்றவர்.
கண்ணப்பர், பள்ளிக் கல்வியைக் கற்று முடித்த பிறகு, செந்தமிழ்க் கல்வி கற்பதிலே சிந்தையைச் செலுத்தினார். சென்னை கலா நிலைய இதழாசிரியர் டி.என்.சேஷாசல ஐயர் இவருக்கு ஆங்கிலத்தையும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் நன்கு கற்பித்தார். மேலும் மே.வீ. வேணுகோபால பிள்ளையிடம் நன்னூல் விருத்தி, தண்டியலங்காரம், திருவிளையாடற் புராணம், அஷ்டப் பிரபந்தம், சீவக சிந்தாமணி முதலிய நூல்களைப் பயின்றார். இலக்கண இலக்கிய தருக்க வேதாந்த போதகாசிரியரான கோ.வடிவேல் செட்டியாரிடம் திருக்குறள், திருவாசகமும், சூளை வைத்தியலிங்கம் என்பவரிடம் தேவாரத்தையும் இசையுடன் கற்றார். சித்தாந்த நூல்களை தாமே பயின்றார், வேண்டுமளவு சைவ சித்தாந்த நூலறிவையும் பெற்றுத் தம் அறிவைப் பெருக்கிச் சிறந்த தமிழறிஞரானார்.
நல்ல தமிழ்ப் புலமையை அடைந்த இவர், பின்னர் ஆசிரியத் தொழிலில் ஈடுபடலானார். புரசைவாக்கம் லூதெரன் மிஷன் உயர் நிலைப்பள்ளியில் துணைத் தமிழாசிரியராக எட்டாண்டுகள், முத்தியால்பேட்டை உயர் நிலைப்பள்ளியில் நான்காண்டுகள், திருவல்லிக்கேணி கெல்லட் உயர் நிலைப் பள்ளியில் பதினான்கு ஆண்டுகள் பணி புரிந்த பின்னர், இராயப்பேட்டை புதுக் கல்லூரியில் தொடக்க காலத்தில் இருந்து பதினாறாண்டுகள் வரை தமிழ்த்துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் விளங்கினார்.
சென்னை சைவ சித்தாந்த சமாஜம், சென்னை எழுத்தாளர் சங்கம், செங்கை மாவட்ட எழுத்தாளர் சங்கம் போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பல பணிகள் புரிந்தார். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பாடத் திட்டக்குழுவிலும் சிறந்த முறையில் நற்பணியாற்றினார்.
தெய்வானையம்மையார் என்பவரை மணம் புரிந்து கொண்டு இல்வாழ்க்கையை நடத்தியவருக்கு ஏழு பெண்மக்கள் தோன்றினர். ஆசிரியராகப் பலருக்குக் கல்வி கற்பித்ததோடு நிற்காமல் பல நூல்களையும் எழுதியுள்ளார். கண்ணப்ப முதலியார் தம்முடைய இறுதிக் காலத்தில், சென்னை பல்கலைக் கழகத்தில் அப்பரடிகள் திருமுறை பற்றிய ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பணி நிறைவேறும் முன்னரே தமது அறுபத்திரண்டாம் வயதில் 1971ம் ஆண்டு மார்ச் 29ம் நாள் இறைவன் திருவடி அடைந்தார்.