அகத்தியர் என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். இவர் சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், தென்திசைக்கு பயனப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவராகவும் அறியப்பெறுகிறார்.இவரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், இவருடைய சீடராக அறியப்பெறுகிறார். மேலும் அகத்தியர், இந்துக் கடவுள்களைப் போல தீயவர்களை அடக்கியதாகவும், இராவணை வென்றவராகவும் அறியப்பெறுகிறார்.
சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய "அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம்" வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார் அகத்தியர். புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.