எஸ்.நவராஜ் செல்லையா ( 1937-2001) அவர்கள் விளையாட்டு, உடலியல்,கதை,கவிதை மற்றும் பல்வேறு தலைப்புகளில் இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டதால் பல்கலைப் பேரறிஞர் எனப் பாராட்டப் பெற்றவர்.
இவர் எழுதிய சிறந்த நூல்களுக்காக மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ளார்.தமிழக அரசின் விருதையும் பெற்றிருக்கிறார். உடல் காக்கும் கலையை உலக மக்களுக்காக உணர்த்தி உற்சாகம் ஊட்டுவதற்காக விளையாட்டுக் களஞ்சியம் என்னும் மாத இதழை தொடர்ந்து 25 ஆண்டுகளாக நடத்தினார்.
விளையாட்டுத் துறையில் கலைச் சொல் அகராதி இவரது இலக்கிய பணிக்கு ஒரு நற்சான்றாகும். விளையாட்டு ஆத்திச்சூடி,சிந்தனைப் பந்தாட்டம் முதலிய நூல்கள் இவரது கவித்திறனை விளக்கும் நூல்கள்.
இசை,நடனம் மற்றும் இசைக்கருவிகளில் பயிற்சி தருவதற்காக சஞ்சு கல்சுரல் அகடமி என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராக செயல்பட்டார். ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்விக் கல்லூரியில் ஆய்வுத்துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றிய அனுபவமானது திருக்குறள் புதிய உரை எனும் நூலிற்கு பெருமை சேர்த்தது.
முதன் முதலாக 1987-ஆம் ஆண்டு உடற்பயிற்சி செய்வதற்கென்று விளையாட்டு இசைப்பாடல்கள் என்ற ஒலி நாடாவை தயாரித்து வெளியிட்டார். முதன் முதலாக தேகத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக 1994-ஆம் ஆண்டு ஓட்டப் பந்தயம் என்ற திரைப்படத்தை தயாரித்து திரையிட்டுள்ளார்.
1996-ஆம் ஆண்டு உடற்கல்வி மாமன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி மாணவர்களின் தேக நலனிற்காக விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற தேர்வு போட்டிகளை நடத்தி பல ஆயிரம் ரூபாயைப் பரிசாக வழங்கியுள்ளார்.