நா.ரா.நாச்சியப்பன்
இராமநாதபுரம் மாவட்டம் ஆத்தங்குடியைச் சேர்ந்தவர். பிறந்த தேதி ஜூலை 13, 1927. பாவேந்தர் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். இளமைக் காலத்திலேயே, பாவேந்தரைத் தம் ஊருக்கு அழைத்து இலக்கியக் கூட்டங்கள் நடத்தியவர். பொன்னி புதுக்கோட்டையிலிருந்து வெளியான போது வெளியீட்டிற்கு உதவியவர்.
பின்னர் மு.அண்ணாமலை சென்னையில் அச்சகம் தொடங்கியபோது, அவ்வச்சகப் பொறுப்பாளராகப் பணிபுரிந்தவர். அக்காலத்தில் வெளியான குயில் இதழினுக்கும் தம் உடலுழைப்பினை நல்கியவர். நாச்சியப்பன் பர்மாவில் வாழ்ந்த காலத்தில் பெரியார் அங்கு சென்ற போது, வரவேற்ற பெருமைக்கும் உரியவர்.
1949-1950ல் பொன்னி இதழின் துணையாசிரியராக இருந்த நாச்சியப்பன், 1945ல் ஐங்கரன் எனும் கையெழுத்து ஏடு நடத்தியும், ஆத்தங்குடியில் திராவிடர் கழகம் தொடங்கியும் பெரியாரிடம் பாராட்டுப் பெற்றவர்..1948ல் கொய்யாக் காதல் எனும் காவியம் எழுதி வெளியிட்டார். கே.ஆர்.இராமசாமியின் “மணமகள்” நாடகத்திற்கும், அண்ணாவின் “சந்திரமோகன்” நாடகத்திற்கும், பாடல்கள் எழுதிய பெருமைக்கும் உரியவர்.
இவர் எழுதிய மற்ற நூல்கள் ஈரோட்டுத் தாத்தா(பெரியார் பற்றியது), இன்பத் திராவிடம், தேடி வந்த குயில் முதலானவை. 1972ல் இளந்தமிழன் என்ற திங்களிதழைத் தொடங்கி நடத்தினார். இவர் இயற்றிய பாடல்களின் இரு தொகுதிகளும் 1980-1981ல் வெளிவந்தன. பல சிறுவர் பாடல்களையும் திறனாய்வு நூல்களையும் எழுதி வருபவர். பாவேந்தரின் வழியில் பல கதைக் கவிதைகளைப் படைப்பதுடன், கவிதையுணர்வு தொய்யாமல் படைப்புகளை வெளியிட்டு வருகின்றார்.
பாரதிதாசன் வழியிலேயே கடவுள் மறுப்பு, தமிழ்ப் பற்று, சமுதாயப் பார்வை, பகுத்தறிவு முதலான பொருண்மைகளில், இவர்தம் கவிதைகள் அமைந்துள்ளன.