நா. பார்த்தசாரதி
தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம் , சிவகாசி வட்டத்தில் உள்ள நதிக்குடி இவரது பிறந்த ஊர். சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். பாரதியார் ஆசிரியராய் இருந்த மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து அந்தக் கால முறைப்படி இலக்கணச் சூத்திரங்களை மனப்பாடம் செய்து கல்வி கற்றவர். கல்கி இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். கல்கியில் சேர்ந்து அவர் எழுதிய முதல் புதினம், குறிஞ்சி மலர்.
1965 இல் கல்கி இதழில் இருந்து விலகி சொந்தமாக தீபம் என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்து 23 ஆண்டுகள் அதை நடத்தினார்.
1979ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தினமணிக் கதிர் வார இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார். சாயங்கால மேகங்கள், நிசப்த சங்கீதம், இராணி மங்கம்மாள் போன்ற நாவல்களை தினமணிக்கதிரில் எழுதினார். கதிரிலிருந்து விலகிய பின் பத்திரிகை உலகத்தைப் பின்புலமாக வைத்து சுந்தரக் கனவுகள் என்கிற தலைப்பில் ஒரு புதினம் எழுதினார்.