அ. ச. ஞானசம்பந்தன்
அ. ச. ஞானசம்பந்தன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்லணைக்கருகில் உள்ள அரசன்குடி என்ற ஊரில் பிறந்தவர். அவரது பெற்றோர் அ. மு. சரவண முதலியார் மற்றும் சிவகாமி ஆவர். அவரது தந்தை சைவசமய பக்திக் காவியமான திருவிளையாடல் புராணத்திற்கு உரையெழுதிய தமிழ் அறிஞர். ஞானசம்பந்தன் லால்குடி போர்டு உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்த பின் இடைநிலை வகுப்புக்கு (இண்டெர்மீடியட்) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தைத் தேர்வு செய்து படித்தார்.
அங்கு தமிழ்ப் பேராசிரியராக இருந்த சோமசுந்தர பாரதியார் அவரது தமிழ் அறிவையும் ஆர்வத்தையும் அடையாளம் கண்டு அவரை இயற்பியலில் இருந்து தமிழுக்கு மாறும்படி செய்தார். அக்கல்லூரியில் படிக்கும் போது வி. எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரி, திரு. வி. க, தெ. பொ. மீனாட்சி சுந்தரம் போன்ற தமிழ் அறிஞர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று 1942ல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக வேலையில் சேர்ந்தார். அக்கல்லூரியில் 1956 வரை வேலை பார்த்தார்