எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியம். இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும் பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது. இவற்றில் பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை. அகத்தையும் புறத்தையும் பற்றிப் பாடல்களாக இந்நூல்களைப் பகுக்கின்றனர். தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்ப்பட்டமையால் தொகை எனப் பெயர் பெற்றது. இத்தொகையுள் ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற்புலவர்களும் உண்டு. ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102. எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலும், கலித்தொகையும் தவிர்த்து மற்றவை ஆசிரியப்பாவால் அமைந்து சில சமயம் வஞ்சிப்பாவால் வரப்பெற்று அமைந்துள்ளன. 3 அடிகள் சிற்றெல்லையாகவும் 140 அடிகள் பேரெல்லையாகவும் பெற்றுள்ளன. இந்நூல்கள் கடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்டன என்பர். தொகுக்கப்பட்ட காலம் கி.பி.3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் கருதுவர்.